மதுரை ஆதினத்தின் மீது கவனத்தை குவித்து எதை திசைத்திருப்ப பார்க்கிறது அரசு: பா.ஜ.,
சென்னை: 'தேவையற்ற மனுக்களை போட்டு, ஹிந்து மத தலைவர்களையும், நீதிமன்ற நேரத்தையும் அவமதிக்கும் வழக்கத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகளிடம், ஞாயிற்றுக்கிழமை கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது, அவரது முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, தி.மு.க., அரசின் ஏவல் துறை. சட்டம் - ஒழுங்கு, தமிழகத்தில் தினமும் சீர்கெட்டு வரும் வேளையில், மதுரை ஆதீனத்தின் மீது கவனத்தை குவித்து, எதை திசை திருப்ப பார்க்கிறது தி.மு.க., அரசு. பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி, ஹிந்து மத மாடதிபதிகளை துன்புறுத்தி, குறிப்பிட்ட சில சமூகத்தவரின் ஓட்டுகளை கவரலாம் என்று திட்டமிடுகிறதா? அடக்குமுறையை கையில் எடுத்து, தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கி விடலாம் என்று நினைக்கிறதா? தி.மு.க.,வின் குறிக்கோள் எதுவாயினும், அதை தேசியவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்பர் என்னும் உண்மையை, தி.மு.க., அரசு உணர வேண்டும். மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்ய கோரும் காவல் துறை மனுவை, உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புல் அவுட்: துன்புறுத்தலை கைவிடணும்! தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பத்து வயது குழந்தை மீது, பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் தி.மு.க., கும்பலை விசாரிக்க நேரமில்லை. போலீசாருக்கே, தி.மு.க.,வினரால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களை கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த நாடகமாடி கொண்டிருக்கிறது அரசு. அறுவை சிகிச்சை முடிந்து, ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, காவல் துறை கைவிட வேண்டும். அவரது முன்ஜாமினை ரத்து செய்ய கோரும் மனுவை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,