சென்னை: அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.அவரது அறிக்கை:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.நேற்று(டிசம்பர் 3) திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருக பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது. பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்றே, ஹிந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த சிஐஎஸ்எப், மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.இந்த வழக்கில் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே . ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில், சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இரு தரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா?இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.