உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கே இருக்கிறார் நித்யானந்தா? ஐகோர்ட்டில் விவாதம்

எங்கே இருக்கிறார் நித்யானந்தா? ஐகோர்ட்டில் விவாதம்

சென்னை:நாகை, திருவாரூர் மடங்களுக்கு தக்கார் நியமன விவகாரத்தில், நித்யானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருவாரூர், நாகையில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பாக, நாகை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பக்தர்கள் அளித்த புகார் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்காரை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானாந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா கோபிகானந்தா என்ற உமாதேவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, 'மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து, அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' என, கடந்தாண்டு செப்., 4ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நித்யானந்தா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''மேல்முறையீடுதாரர் இந்தியாவில் இல்லை. ஆனால், அவர் சார்பில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் தற்போது எந்த நாட்டில் உள்ளார் என்பது தெரியவில்லை. மடங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, மடத்தின் நிர்வாகத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது; அதற்கான அதிகாரம் உள்ளது. மனுதாரர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி