சென்னை: 'சட்டசபை நிகழ்வுகளை முழுதாக நேரலை செய்ய, முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது. அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: அ .தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பதிலடி, முதல்வர் ஸ்டாலினை கதற விட்டிருக்கிறது போலும். வழக்கம்போல அமைச்சர் ரகுபதியை ஏவி விட்டு, பதில் தருகிறேன் என்ற பெயரில் புலம்பித் தள்ளியுள்ளார். ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அ.தி.மு.க.,விடம் எத்தனை அடி வாங்கினாலும், 'இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்' என்று, தானாக வண்டியில் ஏறுவதே வேலையாக மாறி விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி அடிக்கல் நாட்டிய, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை தான், ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தி.மு.க., ஆட்சியின் கையாலாகாத தனத்தால், சாராயம் குடித்து, 68 பேர் உயிரிழந்தபோது, கள்ளக்குறிச்சி செல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இல்லை. அப்போதெல்லாம் ஓடி ஒளிந்து விட்டு, இப்போது தேர்தல் ஜுரத்தில் மேடை போட்டு, காலரைத் துாக்க, கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? அ.தி.மு.க., ஆட்சியில் கட்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முதல், சேலம் புதுப்பிக்கப் பட்ட பஸ் நிலையம் வரை, கருணாநிதி பெயரைக் கூச்சமின்றி, 'ஸ்டிக்கர்' ஒட்டியவர்கள் அ.தி.மு.க., பற்றி பேசலாமா? வேட்டியை மாற்றியதும், கொள்கையைத் துாக்கி எறியும் அமைச்சர் ரகுபதி போன்றோர் இருக்கும் தி.மு.க., இப்படித்தான் இருக்கும். கொரோனா காலத்தில், 'லேப்டாப்' கொடுக்கவில்லை என ரகுபதி கேட்பது, அவர்களின் கூடாரம் எவ்வளவு பெரிய முட்டாள்களை வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருந்தால், சட்டசபை நிகழ்வுகளை முழுதாக நேரலையில் காட்டச் சொல்லுங்கள். நேருக்கு நேர் நின்று பேசுவது யார்? சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் தொடைநடுங்கி யார்? என, தமிழக மக்களும் பார்த்து ரசிப்பர்; சிரிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.