தானியங்கி பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வாகனங்களுக்கான தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைப்பதில், பிற மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது.வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும் தகுதிச்சான்று வழங்க, தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கும் திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன.எப்.சி., வழங்குவதில் முறைகேடுகளை தடுக்கும் விதமாகவும், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.'தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 46 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்' என, 2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; ஆனாலும், அந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை.இதுகுறித்து, சாலை பாதுகாப்பு ஆர்வலர்தேவதாஸ் காந்தி கூறியதாவது:பிற மாநிலங்களில், தானியங்கி பரிசோதனை மையங்கள் வாயிலாக தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வாகனங்களின், 'டயர், பிரேக் சிஸ்டம்' மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், 13 அம்சங்களில் ஆய்வு செய்து, 15 நிமிடங்களில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.டில்லியில் அதிகளவில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், தலா ஐந்துக்கும் மேற்பட்ட தானியங்கி பரிசோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன.தமிழகத்தில் இன்னும், ஒரு தானியங்கி பரிசோதனை மையம் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சாலை விபத்துகளை குறைக்க, தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கும் திட்டத்தை, தமிழக போக்குவரத்து துறை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'முதற்கட்டமாக மதுரையில், ஒரு தானியங்கி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மற்ற இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.