உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மாதத்தில் 14 யானைகள் பலி ஏன்? வனத்துறையினர் தீவிர விசாரணை

4 மாதத்தில் 14 யானைகள் பலி ஏன்? வனத்துறையினர் தீவிர விசாரணை

சென்னை:தமிழகத்தில், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 14 யானைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விசாரணையை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் பாதுகாப்புக்கு, உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இதற்காக நிதி பெறப்படுகிறது. தமிழகத்தில், 2024 கணக்கெடுப்பு அடிப்படையில், 3,063 யானைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 300க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால், யானைகள் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழகத்தில், நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 14 யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. தர்மபுரியில் மட்டும் யானை வேட்டையில், ஒரு யானை கொல்லப்பட்டதாகவும், மற்ற, 13 யானைகளும் இயற்கையான முறையில் இறந்ததாகவும், வனத்துறையினர் குறிப்பு எழுதி உள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக வயது மூப்பு, வாழிட பரப்பளவு குறைதல், உடல் நிலை பாதிப்பு போன்ற காரணங்களால், யானைகள் இறப்பு நிகழும். இதற்கான எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கும். ஆனால், ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு யானைகள் இறப்பதை, இயல்பானதாக எடுத்துக் கொள்ள முடியாது. வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு யானை இறப்பிலும், பிரேத பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அடிப்படையில், தொடர் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில், மனிதர்கள் வேட்டை நோக்கத்தில் கொன்றது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியில் யானை இறந்தால், பிரேத பரிசோதனை மேற்கொள்ள, வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.ஆனால், தமிழக வனத்துறை அதிகாரிகள், வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவுகளை விட, மிகக்குறைந்த அளவிலான மாதிரிகளையே, பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.இதனால், மின்சாரம் தாக்கி இறந்தது, விஷம் வைத்தது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், எளிதாக தப்பி விடுகின்றனர். மத்திய அரசின் வழிமுறைகளை வெளிப்படையாக கடைப்பிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களை தண்டிக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவையில் அதிகம்!

தமிழகத்தில் பகுதி வாரியாக யானைகள் இறப்பு விபரம்:வனக்கோட்டம் - எண்ணிக்கைகோவை - 7தர்மபுரி - 3நீலகிரி - 2நெல்லை - 1மதுரை - 1மொத்தம் - 14


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ