ஆயுள் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் டி.ஐ.ஜி., மீது ஏன் நடவடிக்கை இல்லை?
சென்னை : 'வேலுார் டி.ஐ.ஜி., வீட்டில் திருடியதாக ஆயுள் கைதி தாக்கப்பட்ட சம்பவத்தில், தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக, இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வேலுார் சிறையில் உள்ள, தன் மகன் சிவகுமாரை சந்திக்க அனுமதி கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கலாவதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை
மனுவில், 'ஆயுள் தண்டனை கைதியான என் மகனை, சிறை வார்டன்கள் தாக்கி, தனிமை சிறையில் அடைத்துஉள்ளனர்.'வேலுார் டி.ஐ.ஜி., வீட்டில், 4.50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மகனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மகன் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தவறு செய்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்து, உடனே விசாரணையை துவக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி கள் எஸ்.எம்.சுப்ரமணி யம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., எடுத்த நடவடிக்கைகள் குறித்த கூடுதல் அறிக்கையை, அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் ராஜ் திலக் தாக்கல் செய்தார்.அதை பார்வையிட்ட நீதிபதிகள், அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்டோர் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டு பணிகளில் இருந்த சிறை கைதிகள், திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்றும், கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீது, சிறை குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். அப்போது, 'சிறைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு, எப்படி சிறை குற்ற வழக்குப்பதிவு செய்ய முடியும்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பாரபட்சம்
மேலும், அறிக்கையில், சிறையில் உள்ள விலை உயர்ந்த தேக்கு மரத்தை வெட்டி, வீட்டுக்கு தேவையான கட்டில் போன்ற பொருட்கள் செய்ததாக கூறப்பட்டுள்ளது. நல்ல ஊதியத்துடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற புகார்கள் வருவது வேதனை அளிக்கிறது. கடைநிலை ஊழியர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறார். ஆனால், இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்ட, உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.