பேரூர் : தோட்டத்தில் புகுந்த காட்டு யானை, பசுவை தந்தத்தால் குத்திக் கொன்றது. மேற்குதொடர்ச்சி மலையடிவார கிராமமான, அறிவொளிநகர் அருகேயுள்ள மைல்கல் பகுதியில், பூசாரிகவுண்டர் என்பவரது தோட்டத்தில் நேற்று காலை, ஒற்றை யானை புகுந்தது. காலை 5.30 மணிக்கு, வீட்டுக்கு எதிரே பசு சத்தம் கேட்கவே, தோட்ட உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது, பசுவை ஒற்றை யானை தந்தத்தால் குத்தி, வீடுநோக்கி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுச்சாமி, சிவகாமி உள்ளிட்டோர், அங்கிருந்து தப்பியோடினர். சிறிதுநேரம் பசுமாடு இறந்து கிடந்த பகுதியைச் சுற்றி வந்த யானை, அங்கிருந்து வனப்பகுதி நோக்கிச் சென்றது. தகவலறிந்த வனத்துறையினர், விவசாயிகளிடம் விசாரணை நடத்தினார்.
விவசாயி ஆறுச்சாமி கூறுகையில்,''கடந்த சில நாட்களாக, ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இறந்த பசு, நான்கு மாத சினையாக இருந்தது. முதுகு பகுதியில் தந்தம் ஆழமாக குத்தியதில், ரத்தம் வெளியேறி, அதே இடத்தில் இறந்துள்ளது. யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.