வனத்துறை வாகனத்தை உருட்டி விளையாடிய காட்டு யானை
நீலகிரி; நீலகிரியில் காட்டு யானை ஒன்று சாலையில் நிறுத்தப்பட்ட வனத்துறையினரின் வாகனத்தை சேதப்படுத்தியது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தொண்டியாலம் என்ற இடத்திற்கு, நேற்று இரவு ஒற்றை ஆண் யானை வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வணக்காவலர் மரியதாஸ் தலைமையில் யானை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த மோகன்ராஜ், ரமேஷ்குமார், பாலச்சந்தர், லிவிங்ஸ்டார், சதீஷ்குமார் ஆகியோர் வனத்துறை வாகனத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.சாலையில் நின்றிருந்த யானை, வனத்துறை வாகனத்தை பார்த்ததும் துரத்தி வந்து தாக்கி வாகனத்தை குப்புற தள்ளியது. அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சத்தம் எழுப்பி யானையை அங்கிருந்து துரத்தினார்கள். எனினும் யானை மீண்டும் வனத்துறை வாகனத்தை தாக்க முற்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் கூடி சத்தம் எழுப்பியதால், யானை அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்றது. பின்னர் வாகனத்தை மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரை யானையிடமிருந்து மீட்டனர்.இந்த யானை ஏற்கனவே நெலாகாகோட்டை என்ற இடத்தில், நான்கு வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன், கடந்த வாரம் சேரம்பாடி வனத்துறை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. தொடர்ந்து இந்த யானை வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பகுதி பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.