வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்றைக்கே செய்யலாமே? நாள் சரியில்லையா? ஒரு வாரம் மாங்காய் நியூஸ் வராததால் எனக்கு பொழுதே போகவில்லை! இந்தக் துக்கத்தால் எனக்கு ஒரு வாரமாக தூக்கமே வரவில்லை! இன்றுதான் நிம்மதி!
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை நடக்கவுள்ள கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ் -- மகன் அன்புமணி இடையிலான மோதல், கடந்த எட்டு மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என தீர்மானம் நிறைவேற்றினர். இருவருமே, எதிர் தரப்பு ஆதரவாளர்களை நீக்கியும், தங்கள் தரப்பு ஆதரவாளர்களை பதவியில் நியமித்தும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க., பொதுக்குழு கூடியது. அதில், 'கட்சியின் நிறுவனர் ராமதாசை எதிர்த்து பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு, மாவட்டச் செயலர்கள் செல்வதை தடுத்தது, சமூக வலைதளங்களில் ராமதாசை அவதுாறாக சித்தரித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது' என, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆகஸ்ட் 31க்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, அன்புமணிக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், இதுவரை அன்புமணி பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், 'ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் நாளை நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவதா அல்லது அவருக்கு ராமதாஸ் வழங்கிய செயல் தலைவர் பதவியை பறிப்பதா என்பது குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை, பா.ம.க., நிர்வாகக் குழு உறுப்பினராக ராமதாஸ் நியமித்துள்ளார். எனவே, கட்சியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டால், ஸ்ரீகாந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் பா.ம.க., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, அன்புமணி தரப்பினர் கூறியதாவது:
கட்சியின் அடிப்படை விதிகள்படி, பா.ம.க., தலைவராக அன்புமணியையே தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை தி.நகர், திலக் தெருவில் இயங்கி வருகிறது. ஆனால், சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வந்த அலுவலகத்தை, கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி மாற்றி விட்டதாக ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. இப்படி, நியாயமில்லாத விஷயங்களை மேற்கோள்காட்டி கேள்வி மேல் கேள்வி கேட்டு, விளக்கமளிக்கக் கோரி உள்ளனர். அதில், ஒன்றுக்கு கூட அன்புமணி பதில் அளிக்க வேண்டியதில்லை. சட்ட ரீதியில் கட்சி அன்புமணி தலைமையில் இயங்கி வரும்போது, ராமதாஸ் தரப்பு கெடு விதிப்பதும், நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதும் தேவையில்லாதது. இதையெல்லாம் மீறி, அன்புமணி மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது செல்லாது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது அன்புமணி தரப்புக்கு தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்றைக்கே செய்யலாமே? நாள் சரியில்லையா? ஒரு வாரம் மாங்காய் நியூஸ் வராததால் எனக்கு பொழுதே போகவில்லை! இந்தக் துக்கத்தால் எனக்கு ஒரு வாரமாக தூக்கமே வரவில்லை! இன்றுதான் நிம்மதி!