UPDATED : மே 04, 2025 01:20 AM | ADDED : மே 04, 2025 12:27 AM
சென்னை:சொத்து வரி விகிதங்களை 6 சதவீதம் அளவுக்கு உள்ளாட்சிகள் உயர்த்தி உள்ள நிலையில், 'அப்படி எதுவும் உயர்த்தவில்லை' என, தமிழக அரசு விளக்கம் அளித்துஉள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், 2025 - 26ம் நிதியாண்டில், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது. அதற்கு, தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்: மத்திய அரசின் 15வது நிதிக்குழு நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப, சொத்து வரி வருவாயை உயர்த்த வேண்டும். இவ்வாறு செய்யும் அமைப்புகளுக்கு மட்டுமே, 15வது நிதிக்குழு மானியம் வழங்கப்படும். இந்த நிபந்தனை கருதி, 2024 அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்பின், நகராட்சி நிர்வாகத் துறையால் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், எவ்வித அறிவிப்பும் இன்றி, உள்ளாட்சி அமைப்புகள், சொத்து வரியை 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக வெளியிடப்பட்ட செய்தி, உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.