உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கெடிலம் ஆற்றில் ஆபத்தான இரும்பு பாலம் அகற்றிவிட்டு தரைப்பாலம் அமைக்கப்படுமா?

கெடிலம் ஆற்றில் ஆபத்தான இரும்பு பாலம் அகற்றிவிட்டு தரைப்பாலம் அமைக்கப்படுமா?

உளுந்துார்பேட்டை:கெடிலத்தில் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தை அகற்றி, தரை பாலம் அமைத்து தரும்படி, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை வழியாக, சென்னை, திருச்சி, சேலம், வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த, சென்னை - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், கெடிலம் பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது.

விபத்து அச்சம்

இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1930ம் ஆண்டு ஜி.ஏ.டி., பாலம் இரும்புகளை கொண்டு அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை - உளுந்துார் பேட்டை சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அதனால், 2008ம் ஆண்டு கெடிலம் ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இரும்பு பாலம் பயன்பாடு இல்லாமல் பாழடைந்து இடிந்து விழுந்தது. இருப்பினும், ஆபத்தான இந்த இரும்பு பாலத்தை, மாணவ -- மாணவியர் மற்றும் கிராம மக்கள் அருகே உள்ள சேந்தமங்கலம், கெடிலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செல்வோர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது வாகன விபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்தால், ஆபத்தான இரும்பு பாலத்தின் வழியாக ஆற்றை கடந்து செல்கின்றனர்.

கோரிக்கை

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாழடைந்துள்ள இரும்பு பாலத்தை அகற்றி, தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அவ்வாறு தரைப்பாலம் அமைத்தால், தரைப்பாலத்தின் வழியாக பள்ளி மாணவர்கள், கிராம மக்களும் விபத்து அச்சமின்றி நடந்து செல்வதோடு. இருசக்கர வாகனங்களிலும் ஆற்றை கடந்து செல்ல வசதியாக இருக்கும். அதே நேரத்தில் சிறுபாலத்தை, தடுப்பணை வடிவில் அமைத்தால் ஆற்றில் தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கலாம்.இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி