உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முப்பெரும் விழா மேடையில் உதயநிதிக்கு இடம் தரப்படுமா? போஸ்டரால் பரபரப்பு

முப்பெரும் விழா மேடையில் உதயநிதிக்கு இடம் தரப்படுமா? போஸ்டரால் பரபரப்பு

சென்னை: 'கரூரில், நாளை மறுதினம் நடக்க உள்ள தி.மு.க., முப்பெரும் விழாவில், துணை முதல்வர் உதயநிதியை, மேடையில் முன்வரிசையில் அமர வைக்க வேண்டும்' என வலியுறுத்தி, தி.மு.க.,வினர் 'போஸ்டர்' ஒட்டியிருப்பது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., முப்பெரும் விழா, நாளை மறுதினம் கரூரில் நடக்க உள்ளது. விழா மேடையில், கட்சி தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், முதன்மை செயலர், அமைப்பு செயலர், துணை பொதுச்செயலர்கள் மற்றும் விருது பெறுவோர் இடம் பெறுவர். இந்நிலையில் துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி மாநில செயலருமான உதயநிதிக்கும், மேடை முன்வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும் என, கட்சியில் கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியின் புரோட்டோகால்படி, அணி நிர்வாகிகள் அனைவரும், பொதுக்குழு, செயற்குழு போன்ற கூட்டங்களில் மேடையின் கீழ்வரிசையில் அமர வைக்கப்படுவர். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டும்கூட, மேடையின் கீழ்வரிசையில் அமர்ந்து வருகிறார். துணை முதல்வராக உதயநிதி இருப்பதால், மேடையின் முன்வரிசையில் அவருக்கு இருக்கை போட வேண்டும் என, இளைஞரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் நிர்வாகி நுங்கை சுரேஷ், சென்னை நகரில் ஒட்டியுள்ள போஸ்டர்களில், 'உதயநிதிக்கு தி.மு.க., முப்பெரும் விழா மேடையின் முன்வரிசையில் இடம் அளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த போஸ்டரில், 'ஆயிரம்விளக்கு தொகுதியில், தகுதியான, நடுநிலையான, வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களை, 'பூத் கமிட்டி' நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளது. இது, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி