வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை உறுதி
சென்னை:அரக்கோணம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் எட்டு வயது மகள், 2014 மே 11ல், அரக்கோணத்தில் உள்ள தன் தாத்தா வீட்டுக்கு, விடுமுறைக்கு சென்றுள்ளார். வீட்டின் அருகே தன் தம்பியுடன் விளையாடிய போது மாயமானார். மறுநாள் திருத்தணி அருகே ருத்ரய்யா என்பவரின் கிணற்றில், சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். விசாரணையில், பெருமாள்ராஜ்பேட்டை கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வாலிபர் சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, கொலை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை அரக்கோணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த வேலுார் மகளிர் நீதிமன்றம், கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 மே, 14ல் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.ராஜாகுமார் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொலையான சிறுமியுடன், அவரது தம்பி விளையாடி உள்ளார். வழக்கில் அவர் அளித்த வாக்குமூலத்தை ஆய்வு செய்த போது, அது இயல்பானதாகவும், ஏற்றுக் கொள்ளும் வகையிலும் உள்ளது. ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக கூறி, சிறுமியை டூ - வீலரில் மனுதாரர் அழைத்து சென்றுள்ளார் என, சிறுமியின் தம்பி உள்ளிட்டோர் வாக்குமூலம் அளித்துஉள்ளனர். சிறுமியின் காதுகள் அறுக்கப்பட்டதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், மருத்துவ ஆவணங்கள் வாயிலாக தெளிவாகிறது.தடயங்களை மறைக்க, சிறுமியை கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதாக கூறுவதற்கான ஆதாரத்தை, அவர் முன்வைக்கவில்லை. சாட்சிகள், ஆவணங்களை நன்கு பரிசீலித்து தான், விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதில் தலையிட, எவ்வித முகாந்தரமும் இல்லை.மனுதாரர் மீதான கொலை, போக்சோ, தடயங்களை அழித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், அரசு தரப்பால் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.