உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டீஸ்டா விவகாரத்திற்கு பொருத்தமான தீர்வு: பிரதமர் வேண்டுகோள்

டீஸ்டா விவகாரத்திற்கு பொருத்தமான தீர்வு: பிரதமர் வேண்டுகோள்

தாகா: 'டீஸ்டா ஆற்று நீர் பங்கீட்டு விவகாரத்தில், பொருத்தமான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்' என பிரதமர் மன்மோகன்சிங் இருதரப்பு அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும், 46 ஜவுளி வகைகள் வரி விதிப்பின்றி இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த 40 ஆண்டுக்காலமாக கிடப்பில் கிடந்த எல்லைப் பிரச்னையும், இருதரப்பிலும் கிடக்கும் துண்டு நிலங்கள் பற்றிய பிரச்னையும், பிரதமரின் வங்கதேசப் பயணத்தின் போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், மிக எதிர்பார்ப்பை விளைவித்த டீஸ்டா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர்ப் பங்கீடு விவகாரம், இந்தப் பயணத்தில் எவ்வித முடிவையும் எட்ட வில்லை. வங்கதேச அரசியலில், ஷேக் ஹசீனா, டீஸ்டா விவகாரத்தில் வங்கதேசத்திற்கு சாதகமான பலனைப் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கடைசி நேர முரண்பாட்டால், இவ்விவகாரத்தில் இருதரப்பும் எவ்வித முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால், இருதரப்புக்கும் பாதகமில்லாத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது, நேற்று முன்தினம் நடந்த ஆலோசனையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்தியா திரும்பும் முன், தாகா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இதுகுறித்துப் பேசியதாவது: வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் 46 வகையான ஜவுளி வகைகள், வரி எதுவும் விதிக்கப்படாமல் இந்தியச்சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். வங்கதேசத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தியா எவ்வித முடிவும் எடுக்காது. இருதரப்பு நன்மைக்கும், உகந்ததான ஒரு முடிவு டீஸ்டா ஆற்று நீர் பங்கீடு விவகாரத்தில் விரைவில் எட்டப்பட வேண்டும். எனது இந்தப் பயணத்தில் அதுபோன்ற ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. அதனால், சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள், இப்பிரச்னைக்கு ஒரு பொருத்தமான தீர்வு காண்பதற்கு, தங்களது முழு முயற்சியை அளிக்க வேண்டும். இருதரப்புமே டீஸ்டா ஆற்று நீரை நம்பியிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை