| ADDED : ஆக 17, 2024 11:40 PM
நியூயார்க்: “தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகளுடன் உலகளவில் இந்தியா சிறந்து விளங்குகிறது,” என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்தில், நம் நாட்டின் சுதந்திர தின விழா நேற்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. அங்கு, கிரேட்டர் சியாட்டில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேட்ஸ் அறக்கட்டளை தலைவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அங்கு திரண்டிருந்த, 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:பாதுகாப்பான குறைந்த விலை தடுப்பூசிகளை தயாரிப்பதில் இருந்து, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வரை, புலம்பெயர்ந்த இந்தியர்களின் தலைமைப் பண்பு என இந்தியர்களின் புத்திசாலித்தனம் எங்கும் நிறைந்துள்ளது. இது இந்தியர்களுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கும் உதவுகிறது என்பதே உண்மை. உலகளவில் தெற்கில் உள்ள நாடுகள், தங்கள் டி.பி.ஐ., எனப்படும் தொழில்நுட்ப வலையமைப்புகளை உருவாக்க, இந்தியாவின் அனுபவத்தை பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றமான பல சிறந்த கண்டுபிடிப்புகளுடன் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள், உலகில் உள்ள பல உயிர்களைக் காக்க பயன்படுகின்றன. இது பெருமையான விஷயம். இவ்வாறு அவர் பேசினார்.