உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு!

வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு!

டாக்கா, ஆக. 7- மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, வங்கதேச பார்லிமென்டை கலைப்பதாக அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்தார். அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியை துவங்கியுள்ளார். தேர்தல் முறைகேடு, இட ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஒரு மாத கால போராட்டத்தின் விளைவாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், தற்காலிகமாக இந்தியாவில் தங்கியுள்ளார். லண்டன் நகரில் தஞ்சமடைய பிரிட்டன் அரசிடம் விண்ணப்பித்துஉள்ளதாக தெரிகிறது.

உத்தரவு

ஹசீனா வெளியேறியதும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய தளபதி வகார் உஜ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது குறித்து அதிபர் மற்றும் கடற்படை, விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி பிரதிநிதியும் அதில் பங்கேற்றார்.ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரான பேகம் கலீதா ஜியாவை விடுதலை செய்யுமாறு அதிபர் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அதையடுத்து பார்லிமென்ட் கலைப்பு உத்தரவு அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக ஹசீனா பிரதமரானார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் கூறின. பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஹிந்துக்களும் இந்தியர்களும் தாக்கப்பட்டனர். கடைகள், கோவில்கள் சூறையாடப்பட்டன. கலவர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

நிபந்தனை

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாகவும் அவர்கள் பல நிபந்தனைகள் விதித்துள்ளனர். 'இடைக்கால அரசில் ராணுவத்தினர் இடம்பெற கூடாது; எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது; அரசியல் மற்றும் ராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும்; கடந்த 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பங்கேற்க வேண்டும்' ஆகியவை முக்கிய நிபந்தனைகள். இடைக்கால அரசின் பிரதான பொறுப்பு, பார்லிமென்ட் தேர்தலை சுதந்திரமாக நியாயமாக நடத்தி முடிப்பது மட்டுமே என மாணவர்கள் கூறுகின்றனர். தங்கள் நிபந்தனைகளை ராணுவ தளபதி ஏற்காவிட்டால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் தெரிவித்தார்.சிறு கடன் தொடர்பாக ஆய்வு செய்து, கிராமீன் வங்கியை துவக்கி, பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் பொருளாதார பாதுகாப்பு ஏற்படுத்தியதற்காக நோபல் பரிசு வென்றவர் முகமது யூனுஸ்.

கோரிக்கை

பிரதமர் ஹசீனாவை விமர்சித்ததால், யூனுஸ் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் வசித்து வருகிறார். அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றாலும், நாட்டின் நலன் கருதி மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதாக அவர் கூறியுள்ளார்.யூனுஸ் தவிர பிரபல எழுத்தாளர் சலிமுல்லா கான், டாக்கா பல்கலையின் முன்னாள் பேராசிரியர் நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரும் இடைக்கால அரசில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. அரசியல் சார்புடைய எவரும் இடம் பெறக்கூடாது என மாணவர்கள் நிபந்தனை விதித்த போதிலும், கலீதா ஜியா கட்சியின் முக்கிய தலைவருடன், அதிபர் தொடர்ச்சி 14ம் பக்கம்கலைப்புமுதல் பக்கத் தொடர்ச்சிஆலோசனை நடத்தியுள்ளார். ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தாலும், வங்கதேசத்தின் அரசியல் அல்லாத பிரச்னைகள் எதுவும் இப்போதைக்கு தீராது; இந்த நிச்சயமற்ற சூழலை ராணுவம் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் அளவுக்கு இல்லை என்றாலும், வங்கதேசத்திலும் அரசியல் நிர்வாகம் மீது ஆதிக்கம் செலுத்த, ராணுவம் தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அந்நாடு உருவாகி 53 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 29 முறை, ஆட்சியை கவிழ்க்க ராணுவம் முயன்றுள்ளது. அதில் பல முறை வெற்றியும் பெற்றுள்ளது. முதல் வெற்றி 1975ல். அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானையும் அவரது குடும்பத்தினர் 18 பேரையும், சுட்டுக் கொன்றது ராணுவம். அதிலிருந்து 16 ஆண்டுகள் ராணுவமே ஆட்சி செய்தது. முஜிபுரின் மகள் தான் ஹசீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை