இந்தியா - சீனா கூட்டு முயற்சி ஜி - 20யில் ஜெய்சங்கர் பேச்சு
ஜோஹன்னஸ்பர்க் : பிரிந்து கிடக்கும் இன்றைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், 'ஜி - 20' அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் இந்தியாவும், சீனாவும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் அங்கம் வகிக்கும், 'ஜி - 20' அமைப்பின், 2025ம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டை, தென் ஆப்ரிக்கா தலைமை ஏற்று நடத்துகிறது. அந்த வகையில், ஜி - 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியா - சீனா உறவில் பல்வேறு சவால்கள் இருந்த கால கட்டத்தில் கூட இரு நாடுகளும் பேச்சு நடத்த ஜி - 20 போன்ற அமைப்புகள் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தன.எங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவு செயலரும் சீனா சென்று எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது குறித்து விவாதித்தனர்.தற்போது மேலும் பல கருத்துப் பரிமாற்றம் நடந்ததில் மகிழ்ச்சி. பிரிவினைப்பட்டு கிடக்கும் இன்றைய உலகளாவிய சூழலில், ஜி - 20 அமைப்பை பாதுகாக்க இந்தியாவும், சீனாவும் கடுமையாக உழைத்துள்ளன என்பதை அங்கீகரிக்க வேண்டும். இதுவே சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்திற்கு சான்றாகும்.இவ்வாறு அவர் பேசினர்.