| ADDED : ஆக 19, 2024 01:13 AM
லண்டன்: பிரிட்டனில், ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தின் பெண் ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின், ஹீத்ரோ என்ற பகுதியில், ரேடிசன் ரெட் ஹோட்டல் உள்ளது. இங்கு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தனித்தனி அறைகளில் தங்கி இருந்தனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவு 1:30 மணி அளவில், பெண் ஊழியர் தங்கியிருந்த அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அங்கு துாங்கிக் கொண்டிருந்த பெண் ஊழியரை அவர் சரமாரியாக தாக்கினார்.தலைமுடியை பிடித்து தரையில் தரதரவென இழுத்து, அந்த பெண்ணை மர்மநபர் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு, அருகே உள்ள அறைகளில் இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் உடனடியாக வந்தனர். இதையறிந்த மர்ம நபர், அவர்களிடம் தப்பிக்க முயன்றார். இறுதியில் அவரை, ஹோட்டல் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாக்கிய நபரைப் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் ஊழியர் சிகிச்சைக்கு பின், தாயகம் திரும்பினார். இந்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள ஹோட்டல்களில், சமீபகாலமாக அத்துமீறல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.