டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி கைதானவரிடம் போலீசார் விசாரணை
வாஷிங்டன், :அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் மீது இரண்டாவது முறையாக கொலை முயற்சி நடந்துள்ளது. டிரம்பை குறிவைத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவரிடம், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ல் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது.இந்நிலையில், புளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் முகாமிட்டுள்ளார். அங்கு, நேற்று முன்தினம் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒருவர் சுட்டதாக கூறப்படுகிறது. இதை, பாதுகாப்பு வழங்கும் ரகசிய சர்வீசஸ் படையைச் சேர்ந்த வீரர் பார்த்தார். உடனடியாக அந்த வீரர் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.அந்த மர்ம நபர் காரில் தப்பியோடியதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் படம் எடுத்தனர். அதன் அடிப்படையில், டிரம்ப் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, ஹவாயைச் சேர்ந்த ரயான் வெஸ்லே ரோத், 58, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் இருந்த இடத்தில் இருந்து, 400 அடி துாரத்தில் டிரம்ப் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் நலமாக இருப்பதாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டார். 'நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எதுவும் என் முயற்சிகளை நிறுத்தி வைக்க முடியாது. நான் சரணடைய மாட்டேன்' என, டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், 'இது ஒரு படுகொலை முயற்சி' என, குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் முயற்சி நடந்த கோல்ப் மைதானத்தில் கிடந்த பையில், துாரத்தில் இருப்பவர்களை குறிபார்த்து சுட உதவும் ஸ்கோப் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பைடன் கூறுகையில், “டிரம்ப் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எந்த வன்முறைக்கும் இடமில்லை,” என்றார்.
யார் இந்த ரயான் ரோத்?
கைது செய்யப்பட்டுள்ள ரோத், ஹவாயில் சிறிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர், டிரம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து பலமுறை பதிவுகள் வெளியிட்டுள்ளார்.ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக, கடந்த 2019ல், அவர் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். மேலும் அந்தக் கட்சிக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளார்.உக்ரைனுக்கு ஆதரவாக, கடந்த 2023ல், அவர் பல பதிவுகளை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்தன. அப்போது, தலிபான் அமைப்பிடம் இருந்து தப்பிய ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களை உக்ரைனுக்காக போரிட திரட்டி வருவதாகக் கூறியிருந்தார்.தற்போது, டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்றதற்காக காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், டொனால்டு டிரம்ப் மீது இரண்டாவது முறையாக கொலை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.