அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கிவ்: 'அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முழு தயாராக இருக்கிறது' என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் உடன் போனில் பேசிய அவர், அண்மையில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் டிரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் பிரிட்டன் அதிகாரிகளுடன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்; தலைநகர் கிவ்வில் பிரிட்டன் மற்றும் உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் இடையே மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைதி மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. எங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யாவுடனான போரை நியாயமான முறையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான உக்ரைன் உறுதியாக உள்ளது. அடுத்த வாரம் உக்ரைன் அதிகாரிகளுடன் சேர்ந்து சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திங்கட்கிழமை சவுதி அரசரை சந்தித்து பேச இருக்கிறோம். தொடர்ந்து, மறுநாள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், ராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முழு தயாராக இருக்கிறதுபோர் தொடங்கியது முதல் உக்ரைன் அமைதியைத் தான் வலியுறுத்தி வருகிறது. யதார்த்தமான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம், எனக் கூறினார்.