ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி; புதிய பிரதமராகிறார் பிரெட்ரிக் மெர்ஸ்
பெர்லின் : ஜெர்மனியில் நடந்து முடிந்த பொது தேர்தலில், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சரை, பிரதமர் கடந்தாண்டு நவம்பரில் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஆளுங்கட்சி சார்பில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கூட்டணியில், அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றன. மூன்றாவதாக தீவிர வலதுசாரியான ஏ.எப்.டி., கட்சி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.மொத்தமுள்ள 630 இடங்களில், பழமைவாத கூட்டணி 208 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக தீவிர வலதுசாரியான ஏ.எப்.டி., கட்சி 152 இடங்களை பிடித்துள்ளது. ஆளும் சமூக ஜனநாயக கட்சி 120 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.இதையடுத்து, பழமைவாத கூட்டணி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாணியில், சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரெட்ரிக் அளித்த வாக்குறுதியே, அவரது வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், ஜெர்மனி தேர்தலில் ஏ.எப்.டி., கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது அந்த கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளதை அடுத்து, அந்த கட்சி தலைவரான ஆலீஸ் வீடெலை தொடர்பு கொண்டு பேசிய மஸ்க், தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.
யார் இந்த பிரெட்ரிக் மெர்ஸ்?
வழக்கறிஞரான பிரெட்ரிக் மெர்ஸ் மிகப்பெரும் பணக்காரர். இவர், இதுவரை அமைச்சராக கூட பதவி வகித்ததில்லை. ராணுவம், சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் வரை, ஏஞ்சலா மெர்கலுக்கு இணையான தலைவராக கருதப்பட்டார். இருப்பினும், சில அரசியல் காரணங்களுக்காக இவர் ஓரம் கட்டப்பட்டார்.ஏஞ்சலா மெர்கல் தன் பதவியில் இருந்து 2018ல் விலகிய நிலையில், அதன் பிறகே மெர்ஸ் மீண்டும் அரசியலில் நுழைந்தார். இருப்பினும், சில காரணங்களால் நுாலிழையில் பிரதமர் பதவியை அப்போது தவறவிட்டார். அதன்பின், கட்சியில் தன்னை ஒரு வலிமையான தலைவராக மெல்ல முன்னிறுத்திக் கொண்ட மெர்ஸ், இப்போது பிரதமராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை போல் இவரும், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றப் போவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். ஜெர்மனியின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். தற்போதைய அவரது தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகளே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனாலும், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை நடத்துவது என்பது, அவருக்கு உள்ள மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது.
டிரம்ப் வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்ற பிரெட்ரிக் மெர்சுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளை புறந்தள்ளியுள்ளனர். எரிசக்தி மற்றும் குடியேற்ற விவகாரத்தில் ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுத்து தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். ஜெர்மனிக்கு இது மிகப்பெரிய நாள்' என, குறிப்பிட்டுள்ளார்.