மோடியை சந்திக்க காத்திருக்கிறேன் ரஷ்ய அதிபர் புடின் ஆர்வம்
மாஸ்கோ, ரஷ்யாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச ஆவலுடன் காத்திருப்பதாக நம் தேசிய பாதுகாப்பு ஆலேசாசகர் அஜித் தோவலிடம் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு ரஷ்யாவில் கடந்த இரு நாட்களாக நடந்தது.இதில் பங்கேற்க நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று சந்தித்தார். அப்போது, ரஷ்யாவின் கஸானில் அக்., 22 - 24 வரை நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச ஆவலுடன் காத்திருப்பதாக தோவலிடம் அதிபர் புடின் தெரிவித்தார்.பிரதமர் மோடியின் முந்தைய ரஷ்ய பயணத்தின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்தும், இருதரப்பு உறவு குறித்தும் புடின் விரிவாக விவாதிக்க உள்ளதாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்த சந்திப்பின் போது, ரஷ்யா - உக்ரைன இடையே அமைதிப் பேச்சை துவங்குவதற்கான முயற்சிகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.