உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத வரி: அமெரிக்க அதிபர் உத்தரவு அமலானது

கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத வரி: அமெரிக்க அதிபர் உத்தரவு அமலானது

வாஷிங்டன்; தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். இது அமெரிக்காவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதுடன், வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அஞ்சப்படுகிறது.அமெரிக்க அதிபராக ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தன் எல்லையை ஒட்டியுள்ள வட அமெரிக்க நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். இதைத் தவிர, போதைப் பொருட்களும் அதிகளவில் கடத்தப்படுகின்றன.இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தார். சீனாவின் பொருட்களுக்கு, 10 சதவீதம் வரி விதித்து கடந்த மாதம் டிரம்ப் உத்தரவிட்டார். அதே நேரத்தில், மெக்சிகோ மற்றும் கனடா மீதான நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்தார்.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக மெக்சிகோ மற்றும் கனடா நடவடிக்கை எடுத்தன. ஆனால், அது போதுமானதாக இல்லை. தொடர்ந்து ஆட்கள் சட்டவிரோதமாக நுழைவதுடன், போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவை, டிரம்ப் நேற்று முன்தினம் பிறப்பித்தார். இது நேற்று முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார். அடுத்த, 21 நாட்களில், படிப்படியாக இது அறிமுகம் செய்யப்படும் என, அவர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளின்படி, இதில் உரிய முடிவு எடுக்கப்படும் என, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பம் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கையால், அமெரிக்காவில் விலைவாசி உயரும் என்றும், அது மக்களின் நுகர்வை குறைத்துவிடும் என்றும், நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உக்ரைனுக்கு உதவி நிறுத்தம்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. போர் நிறுத்தம் செய்வதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது இரு தரப்புக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால், இந்த சந்திப்பு முழுமையடையாமல், ஜெலன்ஸ்கி வெளியேறினார். போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக, டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். போர் துவங்கியதில் இருந்து, உக்ரைனுக்கு, 5.74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ உதவிகளையும், 6.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியுதவிகளையும் அமெரிக்கா வழங்கி வந்துள்ளது.

நடவடிக்கை!

மெக்சிகோ, கனடா மீது, 25 சதவீத வரி விதித்து உத்தரவு பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா மீது கூடுதல் வரியை அறிவித்தார். ஏற்கனவே கடந்த மாதம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 சதவீத வரியை அவர் அறிவித்தார். தற்போது கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 15 சதவீத வரி விதிப்பதாக சீனா நேற்று அறிவித்துள்ளது. இதைத் தவிர, சில குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பிலும், சீனா புகார் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ