கொலம்பியா: பள்ளி பஸ் கவிழ்ந்து 17 மாணவர்கள் பலி
பொகோட்டா: கொலம்பியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின், ஆன்டியோகுயோ மாகாணத்தில் லிசியோ ஆன்டியோகுயினோ என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் பட்டமளிப்பு விழா, கரீபியன் கடற்கரை நகரமான டோலுவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், விழாவை முடித்து மெடெல்லினுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வடக்கு கொலம்பியாவின் ரெமெடியோஸ் என்ற இடம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வெறும் 5 கோடி மக்கள் தொகை கொண்ட கொலம்பியாவில், சாலை விபத்துகளில் நாளொன்றுக்கு 22 இறப்புகள் பதிவாகின்றன.