உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனமழையால் வெள்ளப்பெருக்கு ஸ்பெயினில் 205 பேர் பலி

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஸ்பெயினில் 205 பேர் பலி

மேட்ரிட்: ஸ்பெயினில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 205 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கிழக்கு வெலன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்தன. 5,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.போரியோடேலா டோரெ நகர தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பயணியருடன் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கார்கள் மற்றும் வீடுகளில் சிக்கியவர்களின் கதி என்ன ஆனது என, தெரியவில்லை. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. வீட்டு உபயோக பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம், கனமழையில் சிக்கிய பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தீயணைப்பு படையினர், ராணுவத்தினர், பேரிடர் மீட்புப்படையினர் என, ஆயிரக்கணக்கானோர் மீட்டு வருகின்றனர். கார்கள் மற்றும் வீட்டின் மாடிகளில் சிக்கித் தவித்த 70 பேரை, ஹெலிகாப்டர் வாயிலாக மீட்புக்குழுவினர் மீட்டனர்.நேற்று முன்தினம் வரை பலியானோர் எண்ணிக்கை 95 ஆக இருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பாலங்கள் இடிந்து விழுந்து சாலைகள் முழுதும் இடிபாடுகளாக கிடந்தன. இந்நிலையில், நேற்று வரை வெள்ளத்தில் சிக்கி 205 பேர் உயிரிழந்ததாகவும், இதில், வெலன்சியா மாகாணத்தில் மட்டும் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.வெலன்சியா அருகேயுள்ள ஷிவா நகரில், ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, எட்டு மணி நேரத்தில் பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்றும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. பல இடங்களில் வெள்ளம் வடியாததால், அங்கு சிக்கியுள்ளோரை மீட்க முடியாத நிலை உருவாகி உள்ளது. சாலைகள் எங்கும் கார்கள், குப்பை போல் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கவே, ஒரு வாரத்துக்கு மேலாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி