உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "சேனல் 4 காட்சிகள் குறித்து விசாரணை நடத்துங்கள் : இலங்கைக்கு இந்தியா உத்தரவு

"சேனல் 4 காட்சிகள் குறித்து விசாரணை நடத்துங்கள் : இலங்கைக்கு இந்தியா உத்தரவு

கொழும்பு : 'பிரிட்டனின், 'சேனல் 4' ஒளிபரப்பிய, இலங்கைத் தமிழர்கள் மீதான, மனித உரிமை மீறல் வீடியோ காட்சிகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்' என, இலங்கை அரசுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர், 2009ம் ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தது. அப்போது, இலங்கை ராணுவ வீரர்கள், தமிழர்களை குறிப்பாக பெண்கள், குழந்தைகளை துணியில்லாமல் வெறும் உடம்புடன் நிறுத்தி சுட்டுக் கொல்வது மற்றும் கொடுமைப்படுத்துவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோவை, சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 'சேனல் 4' 'டிவி' ஒளிபரப்பியது, உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை, நேற்று அமெரிக்க எம்.பி.,க்கள் பார்க்க, கேபிடல் ஹில்சில் உள்ள காம்ப்ளக்சில், மறைந்த அமெரிக்க முன்னாள் எம்.பி., டாம் லான்டோசினின் மனித உரிமை கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. ஏற்கனவே, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே மீது, அமெரிக்கா இது தொடர்பாக மனித உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த அமெரிக்க எம்.பி.,க்கள், இலங்கை மீதான சர்வதேச விசாரணையை துரிதப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க பார்லிமென்ட் மனித உரிமை கமிஷன் இணைத் தலைவர் ஜேம்ஸ் மிக்கவர்ன் கூறுகையில், 'இந்த வீடியோ காட்சிகள் வலுவான சாட்சியாக அமைந்துள்ளது. மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான, கொடூரமான உதாரணமாக இந்த வீடியோ உள்ளது. போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது, தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசு விசாரிக்க விரும்பாதபட்சத்தில் அல்லது விசாரிக்காதபட்சத்தில், சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். போர் குற்றம் புரிந்தவர்கள், தனி நபராக, இலங்கை ராணுவப் படையாக அல்லது தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாக, யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 'இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி அமைப்பின் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். மேலும், இறுதிக்கட்டப் போரில், கடைசி மாதத்தில் மட்டும் 7,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்' என்று ஐ.நா.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாக வெளியான செய்தியில், 'பிரிட்டனின் 'சேனல் 4' ஒளிபரப்பிய, இலங்கைத் தமிழர்கள் மீதான, மனித உரிமை மீறல் வீடியோ குறித்து, முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். 2009ம் ஆண்டின் இறுதியில், இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போர் பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. இதை விரிவாக இலங்கை விசாரிக்க வேண்டும். 'இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலனில், இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்