டாக்கா : 'வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு தான், அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது' என, அந்த போராட்டம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. பிரதமர் வீடு, அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. நாடு முழுதும் அரங்கேறிய வன்முறையில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார். அவரது இருப்பிடம் குறித்த தகவல் ரகசியமாக உள்ளது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால அரசு நிர்வாகத்தை கவனிக்கும்.மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, 'இன்ஷா அல்லாஹ் பங்களாதேஷ்; தி ஸ்டோரி ஆப் ஆன் அன்பினிஸ்டு ரிவோலுஷன்' என்ற புத்தகத்தை, இந்தியர்களான தீப் ஹால்டர், ஜெய்தீப் மஜும்தார் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சாஹிதுல் ஹசன் கோகோன் ஆகியோர் எழுதி உள்ளனர். மூவரும் பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தாக்குதல் நடத்தியதுடன், உள்ளே நுழைய முயன்றனர். அன்றைய தினம் மதியம் 12:00 மணிக்கு, ராணுவ தளபதி வக்கர் - உஸ் - ஜமான் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள், நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஷேக் ஹசீனாவை வலியுறுத்தினர். தன் உயிரே போனாலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என, ஷேக் ஹசீனா அடம்பிடித்தார். தொடர்ந்து, 1:30 மணியளவில், நன்கு அறிமுகமான இந்திய அதிகாரி ஒருவரிடம் இருந்து, அவருக்கு அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பின், நாட்டை விட்டு புறப்படுவது தான் சரியான முடிவு என ஷேக் ஹசீனா நம்பினார்.இந்திய அதிகாரி சொன்னதும், ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டு, பிற்பகல் 2:42 மணியளவில், ராணுவ விமானத்தில் புறப்பட்டார். இந்தியாவின் அவசர அழைப்பும், அதைத் தொடர்ந்து ஹசீனா எடுத்த முடிவும், 1975ல் அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு துயரமான முடிவு மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க உதவியது.மாணவர்களின் போராட்டத்தில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் ஹசீனா சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நெருங்கி பழகியதால், தன் ஆட்சியை கவிழ்க்க பாக்., இப்படி சதிவேலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா சந்தேகிக்கிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.