வாஷிங்டன் : அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 41.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பரஸ்பர வரி விதிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேச்சு நடத்தினர். பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இரண்டாவது முறை அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்பை, வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yupyf37y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 நீண்டகால நண்பர்
இந்த சந்திப்புக்கு சில மணி நேரங்கள் முன் தான், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு கொள்கை முடிவை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் அவர்களுக்கு விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த பரபரப்பான சூழலில், மோடி - டிரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் டிரம்ப், ''மோடி என் நீண்ட கால நண்பர்; திறமையான தலைவர். இந்தியாவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,'' என, பாராட்டினார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்திய பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்குவதில் முதலிடம் வகிக்கும் நாடாக அமெரிக்காவை மாற்றக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை நானும், பிரதமர் மோடியும் எட்டியுள்ளோம். இந்தியா உடனான அமெரிக்க வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இதை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமையும். ஒட்டுமொத்த ராணுவ கூட்டாண்மையை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு துவங்கி, இந்தியாவுக்கான ராணுவ தளவாட விற்பனையை பல நுாறு பில்லியன் டாலர்கள் அதிகரிக்க உள்ளோம். இந்தியாவுக்கான, 'எப்35' ரக போர் விமானங்களை விரைவில் வழங்கவும் முடிவு செய்துள்ளோம். உலகம் முழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து செயல்படும்.மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவை, லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம்
அவர் விரைவில் இந்தியா சென்று, வழக்கை எதிர்கொள்வார். இது போல மேலும் சிலரை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களையும் விரைவில் அனுப்பி வைப்போம்.அமெரிக்க அணுசக்தித் துறைக்கான புரட்சிகரமான வளர்ச்சியில், எங்கள் அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்திய சந்தைக்கு வரவேற்கும் வகையில் இந்தியா சட்டங்களை சீர்திருத்தம் செய்து வருகிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.இறக்குமதி பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு குறித்து டிரம்பிடம் கேட்டபோது, ''சில குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி மிக அதிகமாகவும், நியாயமற்றதாகவும் உள்ளது. எங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனரோ; அதையே இந்தியாவுக்கு நாங்கள் திரும்ப விதிப்போம்,'' என்றார்.பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும். அடுத்த, 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு தயாரிக்கப்படும்.இருதரப்பு வர்த்தகத்தை வரும், 2030ம் ஆண்டுக்குள் 41.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, 'மிஷன் 500' என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பேச்சு இந்த ஆண்டே துவங்குகிறது. அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய நலனை மிகவும் உயர்ந்ததாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. நான் அவரிடம் இருந்து அதை கற்றுக் கொள்கிறேன். அவரைப் போலவே, இந்தியாவின் தேசிய நலனுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.உலகில் நடந்து வரும் போர்களை நிறுத்த வேண்டும் என்ற டிரம்பின் முயற்சிக்கு என் முழு ஆதரவு உண்டு. இந்த போர்களில் இந்தியா நடுநிலை வகிப்பதாக சிலர் நினைக்கின்றனர். நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை. எப்போதும், அமைதியின் பக்கமே உள்ளோம். ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தபோதும், இது போருக்கான யுகம் அல்ல என்பதை வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, தொழிலதிபர் கவுதம் அதானி விவகாரம் குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மோடி, ''இரண்டு நாடுகளில் இரு முக்கிய தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதில்லை,'' என்றார்.
வழங்கிய டிரம்ப்
தான் எழுதிய, 'எங்கள் பயணம் ஒன்றாக' என்ற புத்தகத்தை, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசளித்தார். அந்த புத்தகத்தில், 'திரு. பிரதமர் அவர்களே, நீங்கள் மிகச்சிறந்தவர்' என எழுதி, டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த புத்தகத்தில், 'ஹவுடி மோடி, நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 2020ல் தாஜ்மஹாலை தன் மனைவி மெலானியாவுடன் டிரம்ப் பார்வையிட்ட படமும் இடம் பெற்றுள்ளது.
பிரதமரை புகழ்ந்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர்
அலுவலகத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் பிரதமர் மோடியை டிரம்ப்
புகழ்ந்து தள்ளினார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்துக்கு டிரம்பை
சந்திக்க மோடி வந்த போது, அவரை கட்டியணைத்து, ''நாங்கள் உங்களை ரொம்பவே
மிஸ் செய்தோம். நீங்கள் நல்ல நண்பர், மிகச்சிறந்த மனிதர்,'' என்று கூறி
டிரம்ப் நெகிழ்ந்தார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில், ''அனைவரும்
பிரதமர் மோடியை பற்றி பேசுகின்றனர். அவர் மிகப்பெரிய தலைவர்; தன் பணியை
சிறப்பாக செய்கிறார். பேச்சுவார்த்தையில் அவர் என்னை விட விடாப்பிடியானவர்;
என்னை விடவும் சிறப்பாக காரியம் சாதிக்கக் கூடியவர்,'' என புகழ்ந்து
தள்ளினார்.
சந்திப்பின்
முக்கிய அம்சங்கள்
ராணுவம்* அமெரிக்கா- - இந்தியா இடையேயான
முக்கிய ராணுவ கூட்டாண்மைக்கான புதிய 10 ஆண்டு கட்டமைப்பு இந்த ஆண்டு
இறுதியில் கையெழுத்தாகும்.* இந்தியாவுக்கு வழங்கப்படும் ராணுவ தளவாடங்களை
பன்மடங்கு அதிகரிக்க அமெரிக்கா முடிவு.* அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன,
'எப் 35' ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு.* இந்திய
ராணுவத்துக்கு, 'ஜாவேலின்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, 'ஸ்ட்ரைக்கர்' கவச
போர் வாகனங்கள், 6 'பி8ஐ' கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் கூடுதலாக
வழங்கப்படும்.* தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் உதிரி பாக வினியோகங்களை
ஒழுங்குபடுத்துவதற்காக சர்வதேச ஆயுத போக்குவரத்து விதிமுறைகள் மதிப்பாய்வு
செய்யப்படும்.* பரஸ்பர ராணுவ கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை
விரைவில் துவங்க உள்ளது.* இந்தியாவிற்கு, 5ம் தலைமுறை போர் விமானங்கள்
மற்றும் ஆழ்கடல் போர் அமைப்புகளை வழங்குவது குறித்த கொள்கை மறுஆய்வை
அமெரிக்கா அறிவித்துள்ளது.தொழில்* இருதரப்பு வர்த்தகத்தை வரும், 2030ம்
ஆண்டுக்குள் 41.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, 'மிஷன் 500' என்ற புதிய
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பேச்சு இந்த ஆண்டே
துவங்குகிறது. தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், 12 லட்சம் கோடி
ரூபாயாக உள்ளது. தொழில்நுட்பம்* தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறவை
மேம்படுத்தும், 'டிரஸ்ட்' என்ற முன்முயற்சியை இரு நாடுகளும் இணைந்து
அறிவித்துள்ளன. அரசுகள், கல்வித்துறை மற்றும் தனியார் துறைக்கு இடையே
முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டாண்மைகளை இது
எளிதாக்கும்.* இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க-ா - இந்தியா ஏ.ஐ., திட்ட
வரைவு இறுதி செய்யப்படும். அடுத்த தலைமுறை தரவு மையங்கள் மற்றும் ஏ.ஐ.,
செயலாக்க கூட்டாண்மைகளும் அறிவிக்கப்பட்டன.* வளர்ந்து வரும்
தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி ஒத்துழைப்பை அதிகரிக்க அமெரிக்க தேசிய
அறிவியல் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி
அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.எரிசக்தி* சர்வதேச
எரிசக்தி நிறுவனத்தில் இந்தியாவின் முழு உறுப்பினர் அந்தஸ்தை ஆதரிக்க
அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. * இந்தியா - அமெரிக்கா சிவில் அணுசக்தி
ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க தயாரிப்பு அணு உலைகளை இந்தியாவுக்கு அளிப்பது
குறித்து பேசப்பட்டது.* அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க, மேம்பட்ட சிறிய அணு
உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டது.பலதரப்பு ஒத்துழைப்பு* பயங்கரவாத
வலைப்பின்னலை ஒடுக்க தவறிய பாகிஸ்தானின் தோல்விக்கு இரு தலைவர்களும்
கண்டனம் தெரிவித்தனர். மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு
பொறுப்பேற்க வலியுறுத்தப்பட்டது.* மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான
பாகிஸ்தானை சேர்ந்த தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த
ஒப்புதல்.
பிரதமரின், 'மிகா'
சொல்லாடல்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது,
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள் என்பதை, 'மேக் அமெரிக்கா
கிரேட் அகேய்ன்' என, டிரம்ப் கூறுவார். இதை சுருக்கமாக, 'மகா' என்று
அழைக்கின்றனர்.செய்தியாளர் சந்திப்பில் மோடி பேசும்போது, ''இந்தியாவை,
2047க்குள் வளர்ந்த நாடாக உயர்த்த, 'விக்ஷித் பாரத் 2047' என்ற இலக்கு
வைத்துள்ளோம். உங்கள் மொழியில் சொன்னால், 'மேக் இந்தியா கிரேட் அகெய்ன்'
என்று கூறுவேன். அதாவது, 'மிகா' என கூறுவேன். இந்த, 'மகா'வும், 'மிகா'வும்
இணைந்து பணியாற்றினால்,'மெகா' வெற்றி நிச்சயம்,'' என்றார்.
'அப்பாவிகள்
ஏமாறுகின்றனர்'
சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு
மோடி அளித்த பதில்:இது இந்தியா சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. சர்வதேச
பிரச்னை. வேறொரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசிக்கும் எவருக்கும்,
அந்த நாட்டில் வாழ எந்த சட்டப்பூர்வ உரிமையோ அல்லது அதிகாரமோ இல்லை என்பதே
எங்கள் கருத்து.இந்த விவகாரம் இதோடு முடியவில்லை. இப்படி வேறு நாடுகளில்
சட்டவிரோதமாக வசிப்பவர்கள் பெரிய கனவுகளாலும், வாக்குறுதிகளாலும்
கவரப்பட்டு வருகின்றனர். அவர்கள் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களை அழைத்து வரும் கும்பலை கூண்டோடு அழித்தால் மட்டுமே பிரச்னை
முடிவுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு
ஆலோசகருடன் சந்திப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
மைக்கேல் வால்ட்ஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, ராணுவம்,
தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியா - அமெரிக்கா உறவு
குறித்து விவாதிக்கப்பட்டதாக மோடி தன் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பின்,
'ஸ்பேஸ் எக்ஸ்' தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பிரதமர் மோடியை
சந்தித்தார். தன் மூன்று பிள்ளைகளை உடன் அழைத்து வந்து மோடிக்கு அறிமுகம்
செய்து வைத்தார்.
ஏ.பி., நிருபருக்கு
தடை
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற உடனே, மெக்சிகோ
வளைகுடா என்பதை, அமெரிக்கா வளைகுடா என, டிரம்ப் மாற்றினார். ஆனால் பிரபல
செய்தி நிறுவனமான, ஏ.பி., எனப்படும், 'அசோசியேட்டட் பிரஸ்' மெக்சிகோ
வளைகுடா என்றே செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் -
பிரதமர் மோடி சந்திப்பு செய்தியை சேகரிக்க, வெள்ளை மாளிகைக்கு வந்த ஏ.பி.,
நிருபரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். செய்தி சேகரிக்க அவருக்கு அனுமதி
வழங்கப்படவில்லை. இதற்கு ஏ.பி., நிறுவனம் கண்டனம்
தெரிவித்துள்ளது.
வழங்கிய
டிரம்ப்
தான் எழுதிய, 'எங்கள் பயணம் ஒன்றாக' என்ற புத்தகத்தை,
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசளித்தார். அந்த
புத்தகத்தில், 'திரு. பிரதமர் அவர்களே, நீங்கள் மிகச்சிறந்தவர்' என எழுதி,
டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த புத்தகத்தில், 'ஹவுடி மோடி, நமஸ்தே
டிரம்ப்' நிகழ்ச்சிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 2020ல் தாஜ்மஹாலை
தன் மனைவி மெலானியாவுடன் டிரம்ப் பார்வையிட்ட படமும் இடம் பெற்றுள்ளது.