அமெரிக்கா எச்சரிக்கை எதிரொலி; வெனிசுலாவுக்கு செல்லும் விமானங்கள் ரத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால். உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து உள்ளார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது, போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெனிசுலா, பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென்டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த சூழலில், ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று நவம்பர் 24ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.