உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அருணாச்சல் எங்களுக்கே சீனா மீண்டும் முரண்டு

 அருணாச்சல் எங்களுக்கே சீனா மீண்டும் முரண்டு

பீஜிங்: 'அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். அது எங்களுடையது' என, சீனா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த 21ல், லண்டனில் இருந்து ஜப்பானுக்கு விமானத்தில் அவர் புறப்பட்டார். வழியில், ஓய்வுக்காக சீனாவின் ஷாங்காய் நகரில் விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றனர். 18 மணி நேரம் உணவு, குடிநீர் தராமல், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சமூக வலைதளத்தில், சமீபத்தில் பெமா குற் றஞ்சாட்டினார். மேலும் இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் அனுப்பினார். இச்சம்பவத்தை கவனத்தில் எடுத்த வெளியுறவு அமைச்சகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 'அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அங்கு வசிப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட்டுடன் வெளிநாடுகளுக்கு செல்ல தகுதி வாய்ந்தவர்கள்' என்றது. இந்நிலையில் நேற்று, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வந்த பெமா என்பவருக்கு எங்கள் அதிகாரிகள் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை; தடுப்புக் காவலிலும் வைக்கவில்லை. மேலும், அவரது பயணத்தை தடுக்கவும் இல்லை. ஷாங்காய் விமான நிலையத்தில் அவருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. ஓய்வுக்கு இடமும் தரப்பட்டது. சீன எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் சட்ட விதிகளின்படியே அவரிடம் விசாரணை நடத்தினர். தவிர, ஜங்னான் சீனாவுக்கு சொந்தமானது. இந்தியாவால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தை ஜங்னான் அல்லது தெற்கு திபெத் என, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை