| ADDED : நவ 16, 2025 04:17 AM
வாஷிங்டன்: பி.பி.சி., நிறுவனம் மன்னிப்பு கேட்டாலும் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். இந்நிலையில், 2-021 ஜன., 6ல் அவருடைய ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகத்தை முற்றுகையிட்டு, சூறையாடினர். டொனால்டு டிரம்ப், தன் ஆதரவாளர்களிடையே பேசியதே வன்முறைக்கு காரணம் என்று கூறப்பட்டது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், கடந்தாண்டு ஒரு ஆவண படத்தை வெளியிட்டது. அதில், டிரம்பின் உரையை திருத்தி வெளியிடப்பட்டது. டிரம்பின் பேச்சே வன்முறையைத் துாண்டியதற்கு காரணம் என்பதுபோல் அது அமைந்திருந்தது.இதைத்தொடர்ந்து பி.பி.சி., மீது டிரம்ப் சார்பில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 44,000 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பி.பி.சி.,யின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்தி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.நடந்த தவறுக்காக பி.பி.சி., சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. இது குறித்து டிரம்புக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் அனுப்பப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், பொதுமக்களை ஏமாற்றியதற்காக பி.பி.சி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தன் கடமை என கூறியுள்ளார். மேலும், அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் சட்ட நடவடிக்கை எடுக்க போவது உறுதி என தெரிவித்துள்ளார்.