பைடன் அளித்த மன்னிப்பு செல்லாது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் : ''முந்தைய அதிபர் ஜோ பைடன், தன் பதவி காலத்தின் கடைசி கட்டத்தில் அளித்த பொது மன்னிப்பு செல்லாது. காரணம் அது அவரால் கையெழுத்திடப்படவில்லை,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க முடியும். இவ்வாறு மன்னிப்பு அளித்தால், மன்னிப்பு பெற்றவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நிறுத்தப்படும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதிபரின் இந்த அதிகாரம் குறித்து, நீதிமன்றங்களும் கேள்வி எழுப்ப முடியாது.அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன், தன் பதவி காலத்தின் கடைசி கட்டத்தில் பலருக்கு மன்னிப்பு வழங்கினார். மோசடி வழக்கில் சிக்கிய அவருடைய மகன் ஹண்டர் பைடனும் இதில் அடங்குவார். இந்நிலையில், கடந்த ஜன., 20ல் அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நேற்று கூறியுள்ளதாவது:ஒரே மாதிரியான பல உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது, ஆட்டோபென் எனப்படும் ரோபோவின் உதவியை அதிபர் உள்ளிட்டோர் பயன்படுத்த முடியும். இதன் வாயிலாக, அதிகளவு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை.ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவோருக்கான உத்தரவுகளில் இவ்வாறு ஆட்டோபென் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஜோ பைடன் தானாக கையெழுத்திடவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் என்ன இருந்தது என்பதும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.அதனால், மன்னிப்பு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டதாகக் கூறப்படும் உத்தரவுகள் செல்லாது. அவர் மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவோர், நீதிமன்ற விசாரணைகளை சந்திக்க வேண்டும். மேலும், ஜோ பைடன் பெயரை பயன்படுத்தி, ஆட்டோபென் வாயிலாக உத்தரவுகளை பிறப்பிக்க காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.