கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி 2வது முறையாக கைது
ஒட்டாவா: இந்தியா - கனடா நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை தொடர்ந்து, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து ' சீக்கியருக்கான நீதி' என்ற பிரிவினைவாத அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த் சிங் பன்னூன் உள்ளான். இவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவனாக இந்தர்ஜித் சிங் கோஷல் என்ற பயங்கரவாதி இருந்து வந்தான்.அவனை ஆயுதங்களை சட்டவிரோதமாக கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.2023ம் ஆண்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பிறகு சீக்கியர்களுக்கான நீதி அமைப்பில் கோஷல் தீவிரமாக செயல்பட்டு வந்தான். கோஷல் கைது செய்யப்படுவது கடந்த ஓராண்டில் இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பர் மாதம் ஹிந்து கோவிலில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவனை போலீசார் கைது செய்து இருந்தனர்.கடந்த 2023ம் ஆண்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்போது பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது தெரிவித்த குற்றச்சாட்டுகள் காரணமாக இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் பிறகு, கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். ஜி 7 மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதன் பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த 18 ம் தேதி டில்லி வந்திருந்த கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுடன் பேசினார். அப்போது பயங்கரவாத எதிர்ப்பு, நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து போராடுதல் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருந்தனர். இச்சூழ்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதியை கனடா போலீசார் கைது செய்துள்ளது கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.