தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க சீனாவுக்கு அதிகாரமில்லை
தரம்சாலா: தன் மரணத்திற்குப் பிறகும், 600 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை தொடரும் என்றும் தனக்கு பிறகான அடுத்த தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சீனாவுக்கு இல்லை என்றும் புத்த மத குருவான தலாய் லாமா உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது, 14வது தலாய் லாமாவாக இருப்பவர், 1935ம் ஆண்டு வடகிழக்கு திபெத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் லாமோ தோண்டப் என்ற பெயரில் பிறந்தவர். இரண்டு வயதில் அவர் தலாய் லாமாவின் மறுபிறவி என அடையாளம் காணப்பட்டவர். கடந்த, 1959ல் லாசாவில் சீன ஆட்சிக்கு எதிராக தலாய் லாமா குரல் கொடுத்தார். இருப்பினும், அது தோல்வியில் முடிந்த நிலையில், ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், வரும் 6ஆம் தேதி தலாய் லாமா தன், 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.அவருக்கு பின் புதிய தலாய் லாமா நியமிக்கப்படுவாரா, 600 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை தொடருமா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில், தன் பிறந்த நாளுக்கு முன் அது தொடர்பான அறிவிப்பை தலாய் லாமா வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:என் மரணத்திற்கு பிறகும், 600 ஆண்டுகள் பழமையான இந்த அறக்கட்டளை தொடரும். என் மறுபிறவியை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் 'கடென் போட்ராங்' அறக்கட்டளை உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் இல்லை. கடந்த 2011ல் புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்துத் தெளிவாக விளக்கி உள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா என்ற வார்த்தையை தலாய் லாமா நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், தலாய் லாமாவின் அறிவிப்புக்கு பின் சீனா இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:சீன அரசு மத நம்பிக்கை கொள்கையை செயல்படுத்துகிறது. ஆனால், மத விவகாரங்கள் மற்றும் திபெத்தில் வாழும் புத்தர்களின் மறுபிறவியை நிர்வகிப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.கடந்த, 18ம் நுாற்றாண்டில் கிங் வம்ச பேரரசர், தங்கக்கலசத்தில் சீட்டு போட்டு புத்த மதத் தலைவர்களை தேர்வு செய்தார். அந்த முறையில் தலாய் லாமா, பஞ்சன் லாமா மற்றும் பிற புத்த மத முக்கிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதுடன், அதற்கு சீன அரசின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.