உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுத்தது சீனா

லுப்லஜானா:'ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த சீனாவுக்கு 100 சதவீத வரியை விதியுங்கள்' என, 'நேட்டோ' நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்த நிலையில், 'எந்தவொரு போரிலும் பங்கெடுத்தது இல்லை, அமைதி பேச்சுகளை மட்டுமே ஊக்கப்படுத்தி வருகிறோம்' என, சீனா பதிலடி கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துக்கும், அதிகளவில் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார். இதைத் தவிர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதன்படி, இந்தியாவுக்கு, 50 சதவீத வரியை விதித்தார். தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது, 100 சதவீதம் வரை வரியை விதிக்க வேண்டும் என, நேட்டோ எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 'இந்த நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதே, உக்ரைன் மீதான போர் தொடர்வதற்கு முக்கிய காரணம். அதாவது, இந்தியா, சீனா போன்றவை, உக்ரைன் மீது போர் தொடுப்பதாகவே கருத முடியும்' என, டிரம்ப் கூறியிருந்தார். ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா சென்றுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளதாவது: சீனா எந்தவொரு போரிலும் பங்கெடுத்தது இல்லை. போருக்கான திட்டமோ, போரில் பங்கெடுக்கும் எண்ணமோ சீனாவுக்கு இல்லை. பற்றி எரியும் பிரச்னைகளுக்கு அமைதி பேச்சு மூலமே தீர்வு காண முடியும். அமைதி பேச்சுக்கு சீனா எப்போதும் ஊக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை