| ADDED : நவ 18, 2024 05:34 AM
லிமா: “அமெரிக்காவில் புதிதாக அமைய உள்ள நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், தகுந்த முடிவை புதிய நிர்வாகம் எடுக்க வேண்டும்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின் போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.தென் அமெரிக்க நாடான பெருவில், ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது.இந்த மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜன., 20ல் அவர் பதவியேற்க உள்ளார். தேர்தல் வெற்றிக்காக டிரம்புக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்திருந்தார்.டொனால்டு டிரம்ப் முன்பு அதிபராக இருந்தபோது, சீனாவுக்கு எதிரான கொள்கையில் தீவிரமாக இருந்தார். அவருக்கு அடுத்து அதிபரான ஜோ பைடன், அந்தக் கொள்கையை தளர்த்தினார். இருப்பினும், சீனாவுடனான உறவில் சிறு விரிசல் இருந்து வந்தது.அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலகும் நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்றார். இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினர். அப்போது, ஷீ ஜின்பிங் கூறியதாவது:அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் பல விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், அமெரிக்கா தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இருதரப்பு உறவு, இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, மனித குலத்தின் எதிர்காலத்துக்கு தேவை.இவ்வாறு அவர்கூறினார்.