உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய கிரிப்டோ ராணி

 சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய கிரிப்டோ ராணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விலையுயர்ந்த ஆடைகள், பொருட்கள், 60,000-க்கும் மேற்பட்ட பிட்காயின் தொடர்பான தகவல்கள் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பிட்காயின்களின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும். மேலும், ஸ்வீடனில் கோட்டை வாங்க வேண்டும், லிபர்லாந்து ராணியாக வேண்டும் என்று எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். யாடி ஷாங் என்ற பெயரில் இருந்த அந்தப் பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது, சீனாவைச் சேர்ந்த ஷிமின் கியான், 47, என்பது தெரியவந்தது. அவர் சீனாவில் இருந்து தப்பி லண்டனுக்கு வந்த தலைமறைவு குற்றவாளி என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். சீனாவில், 'லான்டியன் கெருய்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷிமின் கியான், முதியோர், ஓய்வூதியதாரர்களை குறிவைத்து கிரிப்டோ கரன்சி மோசடியை அரங்கேற்றியுள்ளார். 'படுத்துக் கொண்டிருக்கும்போதே பணக்காரர் ஆகுங்கள்' என்று ஆசையை துாண்டி ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடு செய்ய வைத்துள்ளார். கடந்த, 2017-ல் திட்டம் சரிய ஆரம்பித்ததும், சீன அதிகாரிகள் விசாரணை துவங்கினர். பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டு தப்பியோடி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். கடந்த, 2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஷிமின் கியானுக்கு, இந்த வாரம் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ