உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  விரைவில் நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி

 விரைவில் நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி

பிரசல்ஸ்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு, 2018ல் வெளிநாடு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, விரைவில் பெல்ஜியமில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் வைர வியாபாரி மெஹுல் சோக்சி. இவர், 'கீதாஞ்சலி குரூப்' என்ற பெயரில் வைர நகைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது சகோதரர் மகன் நிரவ் மோடி. இவரும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். இருவரும் இணைந்து போலி ஆவணங்களை உருவாக்கி பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அவற்றை சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டனர். இதை, 2018ல் வங்கி நிர்வாகம் கண்டறிந்தது. இருவர் மீதும் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. இதையடுத்து இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். நிரவ் மோடி ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றார். அவரை, 'இன்டர்போல்' உதவியுடன் சி.பி.ஐ., கைது செய்தது. தற்போது அந்நாட்டு சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. அதே போல் மெஹுல் சோக்சி, அமெரிக்கா அருகே உள்ள கரீபிய தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பினார். அங்கு பணத்தை முதலீடு செய்து குடியுரிமை பெற்றிருந்தார். இந்நிலையில், ரத்த புற்றுநோய் பாதிப்பால் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் சென்ற அவரை, இந்தியா சமர்ப்பித்த சட்ட ஆவணங்களை ஏற்று, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவரை நாடு கடத்த பெல்ஜியம் உயர் நீதிமன்றம் அக்டோபரில் உத்தரவிட்டது. அதை எதிர்த்து மெஹுல் சோக்சி, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நாடு கடத்தல் உத்தரவை வரும் 17க்குள் செயல்படுத்த பெல்ஜியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் மெஹுல் சோக்சி விரைவில் இந்தியா அழைத்து வரப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி