உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்

சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்

டமாஸ்கஸ்: சிரியாவில் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின், முதல் பார்லிமென்ட் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கே அதுகுறித்த தகவல் தெரியவில்லை. மேற்காசிய நாடான சிரியாவில், 24 ஆண்டு காலம் அதிபராக இருந்தவர் பஷர் அல்- ஆசாத். அதற்கு முன், அவரது தந்தை ஹபீஸ், 30 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பம், 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. இந்நிலையில், சிரியாவில் 2011ல் உள்நாட்டு போர் துவங்கியது. கடந்த ஆண்டு கிளர்ச்சி படையினர் சிரியாவை கைப்பற்றி ஆசாத் ஆட்சியை கவிழ்த்தனர். முன்னாள் பயங்கரவாதியான அஹமது அல் -ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபரானார். இதைத்தொடர்ந்து பஷர் அல் ஆசாத் ஆட்சி வீழ்ச்சிக்கு பின், சிரியாவில் முதல் பார்லிமென்ட் தேர்தல் இன்று நடக்கிறது. ஆனால், தலைநகரான டமாஸ்கஸ் உட்பட எந்த நகரத்தில் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வேட்பாளர் பற்றிய போஸ்டர்களோ, பிரசார பேரணிகளோ, எதுவும் நடக்கவில்லை. டமாஸ்கசில் வசிக்கும் பலருக்கும் இந்த தேர்தல் பற்றி எதுவும் தெரியவில்லை. முன்னாள் அதிபர் பஷர் அல்- ஆசாத், தேர்தல் நடத்தாமல் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சியே செய்ததால், தங்களுக்கு தேர்தல் குறித்த எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்று, பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டினர். இந்த தேர்தலில் பொது மக்கள் நேரடியாக ஓட்டளிக்க மாட்டார்கள். மாறாக, பார்லிமென்ட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படும். மீதமுள்ள ஒரு பங்கு இடத்திற்கு உறுப்பினர்களை இடைக்கால அதிபர் அஹ்மத் அல் -ஷரா நேரடியாக நியமிப்பார். இதுகுறித்து தேர்தல் கமிட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது, 'பொதுமக்கள் நேரடியாக ஓட்டளிப்பதே சரியான நடைமுறையாக இருந்தாலும், தற்போது அது சாத்தியமில்லை. உள்நாட்டுப் போரால் பலர் இடம்பெயர்ந்து விட்டனர். ஆவணங்களையும் இழந்துள்ளனர். இதனால், அரசு இந்த நடைமுறையை தேர்வு செய்துள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ