உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கார்பன் உமிழ்வால் பருவநிலை மாற்றம் கொரிய அரசு மீது விவசாயிகள் வழக்கு

 கார்பன் உமிழ்வால் பருவநிலை மாற்றம் கொரிய அரசு மீது விவசாயிகள் வழக்கு

சியோசன்: தென் கொரியாவை சேர்ந்த விவசாயக்குழு ஒன்று, தங்கள் பயிர்களுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு மாநில மின் உற்பத்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த விவசாயக்குழு ஒன்று, தங்கள் பயிர்களுக்கு, பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு அரசுக்கு சொந்தமான மின்சார பயன்பாட்டு நிறுவனமான, 'கெப்கோ' எனப்படும், 'கொரியா எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன்' நிறுவனங்கள் தான் காரணம் என கூறி வழக்கு தொடுத்துள்ளனர். கெப்கோ, மின் உற்பத்திக்காக நிலக்கரி மற்றும் பிற புதைபடிம எரிபொருட்களையே அதிகம் சார்ந்துள்ளது. இதன்காரணமாக, புதைபடிம எரிபொருட்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியால் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சீரற்ற மற்றும் தீவிர வானிலையால், கணிசமான இழப்புகளை சந்தித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். சீரற்ற வானிலை மாற்றத்தால், வழக்கத்தை விட சமீபத்தில் நெல் அறுவடை, 20 முதல் 25 சதவீதம் வரை தொடர்ந்து குறைந்து வருவதாக நெல் விவசாயிகள் கூறுகின்றனர். வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது வெகு கடினமாகிறது என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவை அனைத்தும் மின் உற்பத்தி நிறுவனங்களால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகள் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், இச்சேதாரங்களுக்கு நிதி ரீதியாக அந்நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இதற்காக, நிறுவனங்கள் ஒவ்வொரு விவசாயிக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தென்கொரிய விவசாயிகள் தொடர்ந்துள்ள இந்த வழக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது-. பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற பொருளாதார பாதிப்புகளுக்கு, பெரிய கார்பன் உமிழும் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க செய்யும் உலகளாவிய போக்கை இது பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை