காலநிலை மாநாடு அரங்கில் தீ: உயிர் தப்பினார் மத்திய அமைச்சர் பூபேந்தர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பிரேசிலியா: பிரேசிலில் நடந்த ஐ.நா., காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், நம் நாட்டை சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உயிர் தப்பினார். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெலேம் நகரில், ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு கடந்த, 10ம் தேதி துவங்கியது. இந்த மாநாட்டில், 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். மாநா டு முடிய ஒருநாள் இ ருந்த நிலையில் நேற்று முன்தினம், அரங்கின் 'நீல மண்டலம்' எனப்படும் முக்கிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் , உயர்மட்டப் பிரமுகர்களின் அலுவலகங்கள், கண்காட்சி மையங்கள், தலைவர்கள் பேச்சு நடத்தும் அறைகள் அமைந்துள்ளன. மின் கசிவால் தீ விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அரங்கம் முழுதும் பெரும் புகை பரவியது. புகையை சுவாசித்ததால், 19 பேர்; தீ விபத்து சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இருவர் என மொத்தம், 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. தீ விபத்து நடந்தபோது ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், நம் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அங்கு இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நம் அமைச்சர் பூபேந்தர் யாதவும் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டார் என, அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்புப் பிரிவு மற்றும் பிரேசில் தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாக செயல்பட்டு ஆறே நிமிடங்களில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். ஆறு மணி நேரத்திற்கு மேலான சோதனைக்கு பின், மாநாட்டு அரங்கம் மீண்டும் திறக்கப்பட்டது. தீ விபத்து நடந்த பகுதி மட்டும் மூடப்பட்டது.