கேளிக்கை விடுதியில் தீ: 60 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோசானி: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், 'பல்ஸ்' என்ற இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இதில், நேற்று அந்நாட்டின் பிரபல ஹிப் ஹாப் இசைக்குழுவான டி.என்.கே., குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.அதை காண கேளிக்கை விடுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் கூடினர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அதிகாலை 3:00 மணியளவில் இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், கூட்டத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் பைரோடெக்னிக்ஸ் எனப்படும் நீண்ட நேரம் எரியும் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன.அதிலிருந்து விழுந்த தீப்பொறிகளால் அரங்கத்தில் தீ பிடித்தது. இதை கவனித்த இசைக்குழுவினர், அனைவரையும் வேகமாக வெளியேறும்படி மைக்கில் அறிவித்தனர். இருப்பினும் மளமளவென பரவிய தீயால் கட்டடத்திற்குள் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.