உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது: கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது: கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கெய்ரோ: காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம், எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் - சிசி தலைமையில் நடக்கும் சர்வதேச அமைதி கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, நம் பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடுமையான போர் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. போர் நிறுத்தம் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். 'அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, டிரம்ப் கெடு விதித்திருந்தார். இதையடுத்து, எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வாயிலாக மூன்று நாட்களாக பேச்சு நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. மேலும், காசா நகரம், ரபா, கான் யூனிஸ் மற்றும் வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகளை வாபஸ் பெறுவதற்கான முதல் கட்ட திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐந்து வழிகளை திறந்து விடுவது, பிணை கைதிகள் மற்றும் சிறைவாசிகளை விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், ஷர்ம் அல் - ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் இன்று நடக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் - சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. எனினும், டிரம்ப் - சிசி தலைமையிலான இந்த கூட்டத்தில், நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அல் - சிசி இது குறித்து கூறிய தாவது: காசா முனையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதே, இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஸ்பெயின், ஜப்பான், அஜர்பைஜான், ஹங்கேரி, இந்தியா, எல் சால்வேடார், சைப்ரஸ், கிரீஸ், பஹ்ரைன், குவைத், ஈரான், பாகிஸ்தான் மற்றும் கனடா நாடுகளுக்கு அமெரிக்கா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இஸ்ரேல் இந்த கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காசாவில் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் 48 இஸ்ரேலியர்களை விடுதலை செய்யும் தகவலை ஹமாஸ் உறுதி செய்துள்ளது. கத்தார் பிரதிநிதிகள் பலி எகிப்தின் ஷார்ம் அல் - ஷேக் நகரில் நடக்கும் அமைதி பேச்சில் பங்கேற்க, கத்தார் நாட்டின் சார்பில் மூன்று பிரதிநிதிகள் சென்றனர். தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்கு சென்றபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் கத்தார் பிரதிநிதிகள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை புறக்கணிக்கும் ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் காசா பங்கேற்கப் போவதில்லை என, ஹமாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 'கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் வாயிலாகவே அமைதி பேச்சு நடத்தினோம். அதே சமயம் இஸ்ரேல் மீண்டும் போரை துவக்கினால் பதிலடி தரவும் தயாராக இருக்கிறோம்' என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என இஸ்ரேலும் ஏற்கனவே அறிவித்துள்ளது. காசா அமைதி திட்டத்தின்படி முதல் கட்டமாக போர் நிறுத்தம் அமலாகியுள்ளது. அதே சமயம், இரண்டாம் கட்ட திட்டத்தை எட்டுவது என்பது மிகுந்த சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 'காசாவில் இருந்து வெளியேற வேண்டும், ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்' என அதிபர் டிரம்ப், ஹமாஸை வலியுறுத்தியுள்ளார். 'இதற்கு வாய்ப்பே இல்லை' என, ஹமாஸ் கூறி வருவதால், இரண்டாம் கட்ட அமைதி திட்டம் அமலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ