உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு; எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது; அதிபர் திட்டவட்டம்

ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு; எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது; அதிபர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு. எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஜெர்மனி அதிபரான ஸ்கூல்சை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் கூறியிருந்தார். இதற்கு ஸ்கூல்ஸ் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் மீண்டும் ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிடுகிறார். இது ஜெர்மனி அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றி ஜெர்மனி அதிபர் ஸ்கூல்ஸ் கூறியதாவது: ஜெர்மனியில் தேர்தல் நடக்கும் சூழலில் அமைதியாக இருப்பது முக்கியமானது. இங்கு நடக்கும் அனைத்தும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே நடக்கிறது; ஒரு போதும் அமெரிக்க கோடீஸ்வரரின் தவறான கருத்துக்களுக்கு ஏற்ப நடக்காது.ஜெர்மனியின் அதிபர் ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் அல்ல. ஜெர்மனி, நிலையான, வலுவான ஒரு ஜனநாயக நாடு. மஸ்க் சொல்வதை நான் பொருட்படுத்துவதில்லை. இந்த அவமானங்களை காட்டிலும், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவே பிரச்சினைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அதிபர் தெரிவித்தார். ஆல்டர்நேட்டிவ் பார் ஜெர்மனி என்ற AFD வலதுசாரி கட்சி ஜெர்மனியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.'அந்தக் கட்சி ரஷ்யாவுடன் நெருக்கமான கூட்டணியை ஏற்படுத்த வலியுறுத்துகிறது. அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் நாடுகளின் உறவை பலவீனப்படுத்த விரும்புகிறது' என்றார் ஸ்கூல்ஸ். எலான் மஸ்க் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெர்மனி வலதுசாரி கட்சி, வரும் ஒன்பதாம் தேதி எக்ஸ் சமூக வலைதளத்தில் மஸ்க்கும், தங்கள் கட்சித் தலைவரும் கலந்துரையாட இருப்பதாக அறிவித்துள்ளது. 'நீங்கள் மஸ்க் உடன் விவாதிக்க விரும்புகிறீர்களா' என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்கூல்ஸ், மஸ்கின் ஆதரவு பெறுவது அவசியம் என நான் நினைக்கவில்லை என்றார். கோடீஸ்வரர் மஸ்க், ஜெர்மனி அரசியல் மட்டுமின்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளின் அரசியலிலும் சமீப காலமாக தலையிட்டு வருகிறார். பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மஸ்க் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். ருமேனியா நாட்டில் தேர்தலை ரத்து செய்த நீதிபதிகளை சர்வாதிகாரிகள் என்றும் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 05, 2025 12:10

எலான் மஸ்க் நடவடிக்கைகள், பேச்சு சமீபகாலமாக சரியில்லை என்றுதான் கூறவேண்டும். உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்கிற திமிரோ ....?? கடவுள் கூடிய சீக்கிரம் இவர் கொட்டத்தை அடக்குவார் அதற்கு முன் அவரே அடங்கினால் சரி... இல்லாவிட்டால் சாரி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை