உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இத்தாலி டூ டில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து: தீபாவளி நேரத்தில் பயணிகள் கடும் அவதி

இத்தாலி டூ டில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து: தீபாவளி நேரத்தில் பயணிகள் கடும் அவதி

ரோம்: இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், தீபாவளிக்கு சொந்த ஊர் வர இருந்த இந்திய பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.அக் 20ம் தேதி நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, ஒருபுறம் புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் பணியை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அக்டோபர் 17ம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தில், இந்தியா திரும்ப நூற்றுக் கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அக்டோபர் 17ம் தேதி மிலனில் இருந்து டில்லிக்குச் செல்லவிருந்த AI138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளை அக் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில் விமானம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானமும் உடனடியாக இல்லாத நிலையால், இத்தாலியில் இந்திய பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி