| ADDED : டிச 06, 2025 12:37 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். நிர்பந்தம் இல்லை அங்குள்ள சிந்து மாகாணத்தில் மட்டுமே ஹிந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிந்து மாகாணத்தின் மிர்பூர் சக்ரோவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஹிந்து மாணவியரை கட்டாய மத மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை தொடர விரும்பினால், முஸ்லிமாக மாற வேண்டும் என, ஹிந்து மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை வற்புறுத்தியதாகவும், ஹிந்து மதம் குறித்து இழிவாக பேசியதாகவும், முஸ்லிம் மதத்துக்கு மாறாத மாணவியரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிந்து மாகாண கல்வி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட பள்ளியில் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், மாணவியர், அவர்களது பெற்றோர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். யாரையும் மத மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கவில்லை' என்றார். குற்றச்சாட்டு பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் அடிக்கடி கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப் படுகின்றனர். அவர்கள் வயதான முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமியர் இவ்வாறு கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.