நிச்சயமாக 1000 கோல்களை எட்டுவேன்; அடித்து சொல்கிறார் ரொனால்டோ
துபாய்: ''கால்பந்து அரங்கில் 1000 கோல் அடித்து சாதிப்பேன்,'' என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்தார்.துபாயில் நடந்த 'குளோப் சாக்கர் விருது' விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அப்போது, 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார். மேலும் ரொனால்டோ கூறுகையில்,''காயம் ஏற்படாத பட்சத்தில், 1000 கோல் இலக்கை கண்டிப்பாக எட்டுவேன். தொடர்ந்து விளையாட ஆர்வமாக உள்ளேன். மத்திய கிழக்கு, ஐரோப்பா என உலகின் எந்த பகுதியில் போட்டிகள் நடந்தாலும், மகிழ்ச்சியுடன் கால்பந்து விளையாடுகிறேன். கோல் அடிப்பது, கோப்பை வெல்வது என கால்பந்து பயணத்தை தொடர விரும்புகிறேன். 1000 கோல் என்ற கனவு நம்பரை எட்டுவேதே என் இலக்கு என்பது ரசிகர்களுக்கு தெரியும்,''என்றார்.யார் இந்த ரொனால்டோ?
* போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ, 40. சிறந்த முன்கள வீரரான இவர், சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (226 போட்டி, 143 கோல்) உள்ளார். * கடந்த 20 ஆண்டுகளில் ரொனால்டோ பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல் அடித்துள்ளார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடுகிறாார். * 1000 கோல் எட்ட, ரொனால்டோவுக்கு இன்னும் 44 கோல் தான் தேவை. வரும் 2026ல் நடக்கும் உலக கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார். இவர் 2016ல் போர்ச்சுகல் அணிக்கு யூரோ கோப்பை பெற்று தந்தார்.