ஆப்கன் அமைச்சர் பயணம் விலக்கு கேட்கிறது இந்தியா
நியூயார்க்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு, 2021ல் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இந்த ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக, தலிபான் அமைப்புடன் பல நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன. பாகிஸ்தான், சீனா வெளியுறவு அமைச்சர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சமீபத்தில் சென்றனர். இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவும் பேசி வருகிறது. அந்த வகையில், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்தியா வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துஇருந்தது. இதையேற்று இந்த வாரம் அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2011 செப்.,ல் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்புக்கு உதவியதாக, தலிபான்கள் மீது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலால் தடை விதிக்கப்பட்டது. இதன்படி, முத்தாகி பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான தடை தற்போதும் அமலில் உள்ளது. இதை அடுத்து, இந்தத் தடையில் இருந்து, முத்தாகியின் இந்தியப் பயணத்துக்கு விலக்கு அளிக்கும்படி, ஐ.நா,, பாதுகாப்பு கவுன்சிலில், மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.