உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு

டெஹ்ரான்:அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன. அதன் பின் 2018ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் முதல் பதவிக் காலத்தில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். அதன்பின் ஈரான் தன் விருப்பம் போல் அணு உற்பத்தியில் இறங்கியது. அணுசக்திக்கான முக்கிய தனிமமான யுரேனியத்தை அணு ஆயுத தரத்துக்கு செறிவூட்டியதாக புகார் எழுந்தது. இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கடந்த ஜூலையில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது. அவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும் உதவினார். 12 நாட்களுக்கு பின் இந்த மோதல் நின்றது. தற்போது ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் 2015க்கு முந்தைய பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வரும். ஆனால் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது என ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக டிவி உரையில் அவர் பேசுகையில், “அமெரிக்காவின் நோக்கம் பேச்சு நடத்துவது அல்ல; அழுத்தம் தருவது. அமெரிக்கா பேச்சின் முடிவை முன்கூட்டியே அறிவித்துள்ளது. ஈரானின் அணு செயல்பாடுகளை நிறுத்துவதே அவர்கள் நோக்கம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !